மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்தாளும் முயற்சிகள்

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 250 கிறிஸ்தவக் குடும்பங்களை இந்து மதத்திற்கு அண்மையில் மதம் மாற்றியுள்ளதாக இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, கத்தோலிக்கர்கள் அனைவரும் தங்கள் விசுவாசத்தில் ஒன்றித்திருக்குமாறு அழைப்புவிடுத்துள்ளார் அம்மாநிலத்தின் ராய்ப்பூர் பேராயர் விக்டர் ஹென்றி தாக்கூர். 249 கிறிஸ்தவக் குடும்பங்கள், மற்றும் இரு முஸ்லீம் குடும்பங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 1000 பேரை இந்துவாக மதம் மாற்றியுள்ளதாக உரைத்த இந்து அமைப்பினர், தாய் மதத்திற்கு திரும்பும் இந்த நிகழ்ச்சி ஒரு தொடர்கதையாக இடம்பெறும் எனவும் அறிவித்தனர். 251 குடும்பங்களின் கால்களை கங்கை நீரால் கழுவி இந்து மதத்தில் இணைத்த சடங்கு முறைகள் இம்மாதம் 27ஆம் தேதி தலைநகர் ராய்ப்பூரில் பண்டித் திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி மற்றும் சத்தீஸ்கர் மாநில பாஜக செயலர் பிரபால் பிரதாப் சிங் ஜாதவ் ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சத்தீஸ்கர் மாநில கத்தோலிக்கர்களுக்கு செய்தி வெளியிட்ட பேராயர் ஹென்றி தாக்கூர் அவர்கள், மதம், இனம், நம்பிக்கை ஆகியவைகளின் அடிப்படையில் மக்களை பிரித்தாள முயற்சிகள் இடம்பெறும் இவ்வேளையில், கத்தோலிக்கர்கள் அனைவரும் தங்கள் விசுவாசத்தில் உறுதியாக நின்று செயல்படவேண்டும் என அழைப்புவிடுத்தார்.
இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் பொதுத் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் இத்தகைய முயற்சிகளை கையிலெடுக்கும் இந்து அமைப்புக்களின் செயல் குறித்து கவலை கொள்ள வேண்டாம் என கத்தோலிக்கர்களை விண்ணப்பித்துள்ள பேராயர் ஹென்றி தாக்கூர் அவர்கள், தவறான தகவல்கள் குறித்து கவனமுடன் செயல்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே சத்தீஸ்கர் மாநிலத்தில் கிறிஸ்தவ விரோத நடவடிக்கைகளால் தலத்திருஅவையின் கோவில்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், கைவிடப்பட்டோர் பாதுகாப்பகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டில் மட்டும் சத்தீஸ்கர் மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான 148 வன்முறை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. [2024-01-30 22:50:25]

மத்தியப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட அருள்பணியாளர் விடுதலை!

இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் குழந்தை உரிமைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட கார்மெல் துறவுசபையைச் சேர்ந்த அருள்பணியாளர் Anil Mathew அவர்கள், கைது செய்யப்பட்ட 20 நாட்களுக்குப் பிறகு தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும், இது கிறிஸ்தவ பணிகளை ஒடுக்கும் மாநில அரசின் ஒரு முயற்சியாகும் என்று தலத் திருஅவையின் தலைவர்கள் கூறியுள்ளனர் என்றும் யூகான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் பணிபுரிந்த அருள்பணியாளர் Anil Mathew இம்மாதம் 7-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று கைது செய்யப்பட்டார் என்றும், பின்னர் ஜனவரி 28, இஞ்ஞாயிறன்று ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார் என்றும் அச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
போபாலில் உள்ள அஞ்சல் பெண்கள் விடுதியின் இயக்குநர் Mathew, சிறார் நீதிச் சட்டத்தின் விதிகளை மீறுதல், சட்டவிரோதமாகக் குழந்தைகள் இல்லம் நடத்துதல் மற்றும் மதமாற்ற முயற்சிகளில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கும் அச்செய்திக் குறிப்பு, சட்டவிரோதமாக குழந்தைகள் இல்லம் நடத்தியதற்காக அருள்பணியாளர் Anil Mathew-வை தண்டிக்க முடியாது, அதற்குச் சட்டத்தில் இடமில்லை என்றும் நீதிமன்றம் இவ்வழக்குக் குறித்துத் தெரிவித்ததாகவும் கூறியுள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அருள்பணியாளர் மேத்யூவின் வழக்கறிஞர் Kuttianickal அவர்கள், சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் அவர்மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை, ஏனெனில் அவர் இயக்கும் விடுதி சிறார் இல்லம் அல்ல என்று அறிக்கையொன்றில் நீதிமன்றத்தில் தெரிவித்ததாகவும் அச்செய்தி எடுத்துரைக்கிறது.
மேலும் அவ்விடுதியிலுள்ள அனைத்து சிறுமிகளும் அவர்களது பெற்றோரின் எழுத்துப்பூர்வ வேண்டுகோளின் பேரில்தான் பெண்கள் விடுதியில் தங்க அனுமதிக்கப்பட்டனர் என்றும், சட்டத் தேவையின்படி இவ்விடுதி பள்ளிக் கல்வித் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பு விளக்குகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும் [2024-02-01 22:24:54]

இந்திய பொதுநிலையினருக்கு உதவும் திருஅவை சட்ட படிப்பு

CCBI எனப்படும் இலத்தீன் வழிபாட்டுமுறை இந்திய ஆயர் பேரவையால் நடத்தப்பட்ட, திருஅவை சட்டம் குறித்த ஒராண்டு பட்டயச் சான்றிதழ் படிப்பில் கலந்துகொண்டோருக்கு கர்தினால் Filipe Neri Ferrao அவர்களால் கல்விச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 2022ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2023ஆம் ஆண்டு டிசம்பர் வரை இடம்பெற்ற இந்த பட்டயப்படிப்பு, திருஅவை வாழ்வில் ஒருங்கிணந்த பயணத்தை பலப்படுத்தும் நோக்கத்தில், ஒன்றிப்பு, பங்கேற்பு, மற்றும் மறைப்பணி ஆகியவைகளில் பொதுநிலையினருக்கு ஊக்கமும் சக்தியும் கொடுப்பதாக இருந்தது. இந்த ஓராண்டு பட்டயப் படிப்பில் கலந்துகொண்டோருக்கென ஏற்பாடுச் செய்யப்பட்ட பட்டமளிப்பு விழாவில், அனைவருக்கும் கல்விச் சான்றிதழ்களை வழங்கினார் CCBI ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் Filipe Neri. இந்த இணையவழி பட்டயப் படிப்புக்கு சான்றிதழ் வழங்கிய நிகழ்வில் CCBI ஆயர் பேரவையின் திருஅவை சட்ட அவையின் தலைவர், ஆயர் அந்தோனிசாமி சவரிமுத்து அவர்கள் தலைமை தாங்கினார். பெங்களூருவில் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி இடம்பெற்ற இப்பட்டமளிப்பு விழாவிற்கும், திருஅவைச் சட்டம் குறித்த ஓராண்டு இணையவழிக் கல்விக்கும், இவ்வவையின் நிர்வாக செயலர், அருள்முனைவர் மெர்லின் ரெஞ்சித் அம்புறோஸ் அவர்கள் ஏற்பாடுச் செய்து அவைகளை நடத்தவும் செய்தார்.
அருள்முனைவர் மெர்லின் அவர்கள், இவ்வவையின் நிர்வாகச் செயலராக இருக்கும் அதேவேளையில், பெங்களூரு புனித பேதுரு பாப்பிறை குருமடத்தில் திருஅவைச் சட்ட பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். [2024-02-06 22:35:26]