89 வது அகவையில் விடத்தல்தீவின் முதல் துறவியான அருட்சகோதரி மேரி கொஸ்கா
இறை அழைத்தலுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து, கல்வி மற்றும் ஆன்மீகப் பணியில் பல தசாப்தங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மண்ணின் மகள்
மரிய கிறிஸ்ரின் என்ற இயற்பெயரைக் கொண்ட அருட்சகோதரி மேரி கொஸ்கா, கத்தோலிக்க இறை நம்பிக்கையில் பல நூற்றாண்டுகளாகத் தழைத்தோங்கிய எமது விடத்தல்தீவு மண்ணிலிருந்து இறை அழைத்தலுக்குப் பதிலளித்து, தமது வாழ்வை முழுமையாக இறைப்பணிக்கு அர்ப்பணித்த விடத்தல்தீவின் முதலாவது துறவியாக பெருமையுடன் நினைவுகூரப்படுகின்றார்.
இறை நம்பிக்கையும் பாரம்பரியமும் நிறைந்த விடத்தல்தீவு மண்ணின் ஆன்மீக வரலாற்றில், அருட்சகோதரி மேரி கொஸ்காவின் இறை அழைத்தல் வாழ்வு ஒரு முக்கியமான அத்தியாயமாகும்.
இறை நம்பிக்கையில் வளர்ந்த குடும்பப் பின்னணி
அருட்சகோதரி மேரி கொஸ்கா அவர்கள் 1937 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 10 ஆம் திகதி, திரு. திருமதி சுவக்கீன் செபமாலை (முத்தம்மா) தம்பதியரின் மகளாகப் பிறந்தார்.
சூசைப்பிள்ளை, பத்திநாதன், இம்மனுவேல், பிரான்சிஸ், வரப்பிரகாசம், அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லொஸ், இமல்டா, மரியலில்லி, மரியகொறற்றி, மரியடேய்சி ஆகிய பத்து சகோதர, சகோதரிகளுடன் இறை நம்பிக்கையும் குடும்பப் பாசமும் நிறைந்த சூழலில் வளர்ந்தார்.
தமது ஆரம்பக் கல்வியை விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கற்ற அவர், பின்னர் யாழ்ப்பாணம் இளவாலையில் கல்வியைத் தொடர்ந்தார். கல்வி பொதுத்தர சாதாரண தரப் பரீட்சையில் முதலாம் தரத்தில் சித்தியடைந்தார்.
இறை அழைத்தலுக்கான பயணம்
யாழ்ப்பாண மறைமாவட்ட முன்னாள் ஆயர் அதிவந்தனைக்குரிய எமிலியானுஸ்பிள்ளை அவர்களின் அறிவுரையும், யாழ்ப்பாணம் இளவாலை கன்னியர் மடத்தின் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் இறை அழைத்தல் தொடர்பான ஊக்குவிப்பும், அவரது வாழ்வில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தன.
அதனைத் தொடர்ந்து 1954 முதல் 1956 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு மடத்தில் இணைந்து வாழ்ந்து, தமது இறை அழைத்தல் பாதையில் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார்.
பின்னர் யாழ்ப்பாண ஆசிரிய கலாசாலையில் ஆசிரியப் பயிற்சியை நிறைவு செய்தார். 1960 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் ஆசிரியப் பணியை ஆரம்பித்தார்.
இறைப்பணியுடன் இணைந்த கல்விப் பணி
ஆசிரியராக மட்டுமன்றி, அர்ப்பணிப்புமிக்க துறவியாகவும் பணியாற்றிய அருட்சகோதரி மேரி கொஸ்கா அவர்கள், இளவாலை, பாஷையூர், யாழ்ப்பாணம், பறப்பாங்கண்டல், மன்னார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கன்னியர் மடங்களிலும் கல்வி மற்றும் ஆன்மீகப் பணிகளை மேற்கொண்டார்.
1961 ஆம் ஆண்டு ஆனி மாதம் 18 ஆம் திகதி, யாழ்ப்பாணம் இளவாலையில் Mother விசிற்றேசன் அவர்களின் முன்னிலையில் தனது இறை அழைத்தல் அர்ப்பண வாழ்வின் நித்திய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார்.
1960 முதல் 1964 வரை யாழ்ப்பாணத்திலும், 1964 முதல் 1968 வரை பறப்பாங்கண்டலிலும், 1968 ஆம் ஆண்டு வங்காலையிலும், 1969 ஆம் ஆண்டு மன்னாரிலும், மீண்டும் 1970 முதல் 1973 வரை யாழ்ப்பாணத்திலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.
அதிபராக ஆற்றிய சிறப்பான பணி
ஆசிரியப் பணியில் பெற்ற அனுபவமும் ஆற்றலும் காரணமாக, 1973 ஆம் ஆண்டு முதலாம் தர அதிபராக நியமிக்கப்பட்ட அருட்சகோதரி மேரி கொஸ்கா அவர்கள், தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு வரை பல்வேறு பாடசாலைகளில் அதிபராகக் கடமையாற்றினார்.
அவரது அதிபர் பணிக்காலம் பல்வேறு கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையதாக அமைந்தது.
1973 – 1977: பலாலி
1978 – 1984: இரணைதீவு
1985 – 1990: கிளிநொச்சி உருத்திரபுரம்
1990 – 1995: பாஷையூர்
இந்தப் பாடசாலைகளில் அதிபராகப் பணியாற்றிய காலப்பகுதியில், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துடன் அவர்களின் ஒழுக்கம், ஆன்மீகம் மற்றும் மனிதநேய வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் வழங்கினார்.
கல்விக்கு அப்பால் தொடர்ந்த இறைப்பணி
1995 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் அவரது பணிவாழ்வு ஓயவில்லை. நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஜெயந்திபுரம், யாழ்ப்பாணம் பருத்தித்துறை, மன்னார்,
இரணைமாதாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பங்குப் பணிகளிலும் ஆன்மீகப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
கல்விப் பணியிலிருந்து ஆன்மீகப் பணிக்கான அவரது பயணம், இறை அழைத்தலின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தும் ஓர் அர்ப்பணிப்பு வாழ்வாகவே அமைந்தது.
89 வயதிலும் தொடரும் இறைப்பணி
தமது 89வது வயதைக் கடந்துள்ள அருட்சகோதரி மேரி கொஸ்கா அவர்கள் தற்போது நானாட்டான் மடத்தில் வாழ்ந்து வருகின்ற போதிலும், அவரது இறைப்பணிக்கான ஆர்வமும் அர்ப்பணிப்பும் இன்றளவும் குறையவில்லை.
வயதையும் உடல்நிலையையும் பொருட்படுத்தாது, தம்மால் இயன்ற வகையில் பல்வேறு ஆன்மீகப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்.
குறிப்பாக,
மறைக்கல்வி கற்பித்தல்,
குடும்பங்களைச் சந்தித்து ஆன்மீக வழிகாட்டுதல் வழங்குதல்,
அருட்சாதனங்களுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபடுதல்,
நோயாளிகளுக்கு நற்கருணை வழங்குதல்,
பங்குகளில் இயங்கும் பக்தி சபைகளை ஊக்குவித்தல்,
திருப்பலி மற்றும் ஏனைய வழிபாடுகளுக்கு உதவுதல்
போன்ற பணிகளை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்றார்.
விடத்தல்தீவு மண்ணின் பெருமை
ஒரு சிறுமியாக விடத்தல்தீவு மண்ணில் பிறந்து வளர்ந்து, கல்வியாளராகவும், அதிபராகவும், துறவியாகவும், இறைப்பணியாளராகவும் தமது வாழ்வை அர்ப்பணித்த அருட்சகோதரி மேரி கொஸ்கா அவர்கள், விடத்தல்தீவின் ஆன்மீக வரலாற்றில் அழியாத தடம் பதித்த ஒரு பெருமைக்குரிய மண்ணின் மகள்.
இறைவனின் அழைப்பை ஏற்று, தனக்கென வாழாமல் பல தலைமுறைகளின் கல்வி, ஆன்மீகம் மற்றும் மனிதநேய வளர்ச்சிக்காக தமது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த அவரது வாழ்வு, இன்றைய தலைமுறைக்கும் குறிப்பாக இளம் பெண்களுக்கும் இறை அழைத்தலின் மகத்துவத்தை எடுத்துக்காட்டும் ஒரு வாழும் சாட்சியாக திகழ்கின்றது.
விடத்தல்தீவின் முதல் துறவி என்ற பெருமையைத் தாங்கி,
பல தசாப்தங்களாக இறைவனுக்கும் மக்களுக்கும் பணியாற்றிவரும்
அருட்சகோதரி மேரி கொஸ்கா அவர்களின் இறைப்பணி மேலும் பல ஆண்டுகள் தொடர
எமது அன்பான வாழ்த்துகளையும் செபங்களையும் தெரிவித்துக்கொள்வோம்.
ஜேம்ஸ். சுதாகரன்
ஜகார்த்தா, இந்தோனேசியா
